கோலாலம்பூர், ஜனவரி.20-
2026-ஆம் ஆண்டிற்கான எஸ்டிஆர் எனப்படும் Sumbangan Tunai Rahmah உதவித் தொகையை, இன்று முதல் 5 மில்லியன் மலேசியர்கள் பெறவுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு புத்தாண்டு செய்தியில் தாம் அறிவித்ததன் படி, மடானி அரசாங்கம் முதற்கட்ட எஸ்டிஆர் நிதியுதவியை இன்று முதல் விநியோகம் செய்யும் என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உதவித் தொகையானது 100 ரிங்கிட் முதல் 500 ரிங்கிட் வரையில், அவரவர் தகுதிக்கு ஏற்ப, 3.7 மில்லியன் குடும்பங்கள், 1.3 மில்லியன் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
எஸ்டிஆரில் செய்யப்பட்ட மேம்பாடுகள், தற்போது சாரா- உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அன்வார், தகுதியுள்ள பிரிவுகள், தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, நிலையான மற்றும் தொடர்ச்சியான உதவியைப் பெறுவதை உறுதிச் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பண்டிகைக் காலங்கள் போன்ற அதிக செலவுகள் ஏற்படும் நேரங்களில், காலாண்டின் அடிப்படையில் கூடுதல் உதவியாக எஸ்டிஆர் வழங்கப்படுகிறது என்றும், அதே வேளையில் ஒரு நிலையான மாதாந்திர அடிப்படை உதவியாக சாரா செயல்படுகிறது என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.








