May 13, 2026
Thisaigal NewsYouTube
ஜாலான் மஸ்ஜித் இந்தியா நிலக்குழி விபத்து: விஜயலட்சுமியின் குடும்பத்தினர் 8 லட்சத்து 24 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு கோருகின்றனர்
தற்போதைய செய்திகள்

ஜாலான் மஸ்ஜித் இந்தியா நிலக்குழி விபத்து: விஜயலட்சுமியின் குடும்பத்தினர் 8 லட்சத்து 24 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு கோருகின்றனர்

Share:

கடந்த 2024-ஆம் ஆண்டு கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் ஏற்பட்ட நிலக்குழி விபத்தில் சிக்கி மாயமான இந்தியச் சுற்றுலாப் பயணி விஜயலட்சுமியின் குடும்பத்தினர், 8 லட்சத்து 24 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு கோரியுள்ளனர்.

கடந்த 2023ஆம் ஆண்டு, மரம் ஒன்று விழுந்து மகனை இழந்த தம்பதியருக்கு, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய இழப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த தொகை நிர்ணயிக்கப்பட்டதாக விஜயலட்சுமியின் குடும்பத்தின் சார்பில் வழக்கறிஞர் எம். பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் மற்றும் கூட்டரசுப் பிரதேச பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா யோ ஆகியோருடன் இழப்பீட்டுத் தொகை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மரம் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில், பராமரிப்பில் அலட்சியம் இருந்ததாக செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதேபோல், நிலக்குழியில் விஜயலட்சுமி விழுந்த சம்பவத்திலும் அலட்சியம் நடந்துள்ளது என்பதை தாங்களும் நிரூபிக்க முடியும் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எம். பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில் விஜயலட்சுமியின் மகன் எம்.சூரியாவும் உடன் இருந்தார்.

கடந்த 2024 ஆகஸ்ட் 23-ஆம் தேதி, கோலாலம்பூரின் பரபரப்பான ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியில் நடந்து சென்றபோது, திடீரென ஏற்பட்ட 8 மீட்டர் ஆழமுள்ள நிலக்குழியில் விழுந்து விஜயலட்சுமி மாயமானார். ஒன்பது நாட்களாகத் தொடர்ந்து தீவிரத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், நிலத்தடி நீரோட்டம் மற்றும் மீட்புக் குழுவினரின் பாதுகாப்பு கருதி செப்டம்பர் 1-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News