DAP யில் தமது வருகையை கண்டு கட்சியில் உள்ளவர்கள் யாரும் பயப்பட வேண்டியதில்லை என்று அக்கட்சியின் புதிய செனட்டராக நியமிக்கப்பட்டுள்ள மருத்துவ நிபுணர் Dr லிங்கேஸ்வரன் அருணாசலம் கேட்டுக்கொண்டுள்ளார்.
DAP யில் ஓர் உறுப்பினராக இணைந்து 5 மாதங்கள் மட்டுமே ஆகின்றன நிலையில் தம்மை செனட்டராக நியமித்துள்ள கட்சியின் முடிவு குறித்து கட்சியில் உள்ள சில தரப்பினர் கேள்வி எழுப்பிய போதிலும் கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் தாம் மதிப்பதாகவும், தமது சேவைத்திறனை மதிப்பீடு செய்யுமாறும் பினாங்கு சுங்கை பாக்காப் மருத்துவமனையின் இயக்குநரான டாக்டர் லிங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
மஇகாவின் மூத்த அரசியல்வாதியான பினாங்கு, பட்டர்வொர்த் டத்தோஸ்ரீ ஆர். அருணாசலத்தின் புதல்வரான 36 வயதான டாக்டர் லிங்கேஸ்வரன், பினாங்கு மாநில ஜசெக சார்பில் செனட்டராக நியமிக்கப்பட்டதை பினாங்கு முதலமைச்சர் Chow Kon Yeow தற்காத்துப் பேசியுள்ளார். பினாங்கு மருத்துவமனையில் பல்வேறு உயரிய பொறுப்புகளை வகித்துள்ள டாக்டர் லிங்கேஸ்வரன், DAP யில் ஓர் உறுப்பினராக இணைந்து இருப்பதை கட்சி நல்வரவாக பார்க்கிறது என்று தெரிவித்து இருந்தார்.
பினாங்கு சுகாதாரத்துறை சேவையில் தாம் கொண்டுள்ள நிபுணத்துவத்தை கட்சியின் வளர்ச்சிக்கு முழுமையாக பயன்படுத்தப் போவதாக உறுதி அளித்த 36 வயதான டாக்டர் லிங்கேஸ்வரன், DAP யில் இந்தியர்களை பிரதிநிதிப்பதற்கு மிகச் சிறந்த கல்விமானாக போற்றப்படுகிறார்.
டாக்டர் லிங்கேஸ்வரன், ஆஸ்திரேலியா, New South Wales பல்லைக்கழகத்தில் மருத்துவத்துறை நிர்வாகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர் ஆவார்.
வரும் பினாங்கு சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு டாக்டர் லிங்கேஸ்வரனை மாநில துணை அமைச்சராக கொண்டு வருவதற்கு DAP திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. DAP யில் இந்தியர்களை பிரதிநிதிக்கக்கூடிய ஒரு கல்விமான் என்பதை மக்களிடம் அறிமுகப்படுத்தவே அவருக்கு செனட்டர் பதவியை கட்சி வழங்கியுள்ளதாக கட்சியின் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.








