ஜோகூர் பாரு, ஜனவரி.18-
மாணவர்களின் கல்வித் தரத்தை மதிப்பிடுவதற்கு யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகள் ஒரு சீரான அளவுகோலாக அமையும் என்பதால், அவற்றை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற ஆலோசனையை ஜோகூர் மாநில அரசு வரவேற்றுள்ளது. ஒரு தெளிவான மதிப்பீட்டு முறை இருக்க வேண்டும் என்ற பெற்றோர்களின் விருப்பத்தையும் கவலையையும் கருத்தில் கொண்டு இந்தத் தேர்வுகளை மீண்டும் அமல்படுத்துவது அவசியமான ஒன்று என மாநிலக் கல்வி, தகவல் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அஸ்னான் தாமின் தெரிவித்தார்.
அதே வேளையில், தற்காலக் கல்விச் சூழலில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்களிலும் ஒழுக்க நடவடிக்கைகளிலும் அவர்களுக்கு சட்டப் பாதுகாப்பை வழங்க 'ஆசிரியர் பாதுகாப்புச் சட்டம்' உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் ஆதரித்தார். இந்த மாற்றங்கள் நாட்டின் கல்வி முறையை சமநிலைப்படுத்துவதோடு, சிறந்த, போட்டித்தன்மை மிக்க எதிர்காலத் தலைமுறையை உருவாக்க உதவும் என ஜோகூர் மாநில அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.








