புத்ராஜெயா, ஜனவரி.18-
மலேசியக் கடல் பகுதியில் சட்டத்திற்குப் புறம்பாக மீன்பிடித்த அந்நிய நாட்டு மீனவர்களைக் கட்டுப்படுத்த 2019 முதல் மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் நாகா நடவடிக்கையில், இதுவரை 5,329 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆறு ஆண்டுகளில் மொத்தம் 628 அந்நிய நாட்டு மீன்பிடிப் படகுகள் பிடிப்பட்டதோடு, அவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 203.44 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பிடிப்பட்ட படகுகளில் 469 படகுகளுடன் வியட்நாம் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தோனேசியா, தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளின் படகுகளும் மலேசிய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. நாட்டின் கடல் எல்லைப் பாதுகாப்பை உறுதிச் செய்யவும், உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என மலேசிய கடலோர காவல்படைத் தலைமை இயக்குநர் டத்தோ முஹமட் ரோஸ்லி அப்துல்லா தெரிவித்துள்ளார்.








