கோலாலம்பூர், ஜனவரி.18-
பெக்கான் முகாமில் பி தேசிய சேவைப் பயிற்சிக்காக வந்த 254 பயிற்சியாளர்கள், போதிய இடவசதி இல்லாத காரணத்தால் மீண்டும் வீட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் விளக்கமளித்துள்ளார். பயிற்சியில் கலந்து கொள்வது குறித்து முன்னரே அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தாத தன்னார்வலர்கள், அதிக எண்ணிக்கையில் Walk-in முறையில் நேரடியாக முகாமிற்கு வந்ததே இந்த இட நெருக்கடிக்கு முக்கியக் காரணமாகும்.
556 பேரை மட்டுமே ஏற்கும் வசதி கொண்ட அந்த முகாமிற்கு மொத்தம் 838 பேர் வருகை தந்ததால், தங்குமிட வசதியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. திருப்பி அனுப்பப்பட்ட பயிற்சியாளர்களின் போக்குவரத்துச் செலவுகளைத் தற்காப்பு அமைச்சே முழுமையாக ஏற்கும் என்றும், அடுத்த பயிற்சித் தொடரில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.








