பத்துமலைத் தமிழ்ப்பள்ளியின் ஒன்றாம் ஆண்டு மாணவன் 7 வயது உதயகுமார் வேன் மோதி உயிரிழந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது இதுவரை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படாதது குறித்து கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் மீது உயிரிழந்த மாணவனின் பெற்றோர் ஸ்ரீதேவன் - ரதி தம்பதியர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் 30-ஆம் தேதி, பத்துகேவ்ஸ் கம்போங் லக்சமணா, சாய் ஆனந்தா அறக்கட்டளை ஆசிரமத்தின் முன் நிகழ்ந்த இச்சம்பவத்தில், 50 வயது ஓட்டுநர் விஜயன் என்பவர் வேனிலிருந்து இறங்கிய மாணவன் மீது வாகனத்தை ஏற்றியதுடன், மீண்டும் பின்னோக்கி எடுத்து சிறுவனின் உடலில் சக்கரத்தை ஏற்றியது மன்னிக்க முடியாத அலட்சியம் என பத்துகேவ்ஸ், ருமா பாஞ்சாங் பிங்கிரான் பகுதியை சேர்ந்த தந்தை ஸ்ரீதேவன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
வேனை செலுத்திய ஓட்டநருக்கு PSV உரிமம், கடந்த 2024 ஆம் ஆண்டு காலாவதியான நிலையில் அந்த வேனை செலுத்துவதற்கு சம்பந்தப்பட்ட நபருக்கு சாய் ஆனந்தா அறக்கட்டளை ஆசிரமம் எவ்வாறு அனுமதி அளித்தது என்பது குறித்து 49 வயது தந்தை ஸ்ரீ தேவன் கேள்வி எழுப்பினார்.
தங்கள் மகன் உயிரிழந்தது குறித்த விசாரணை என்னவானது என்று கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் பவினார் கிருஷ்ணனிடம் கேட்ட போது "வழக்கு முடிய 6 மாதங்கள் ஆகும்" என்றும் வேன் ஓட்டுநரை உள்ளே வைத்து என்னவாகப் போகிறது என்று அலட்சியமாகப் பதிலளித்ததாக மாணவனின் தாயார் 46 வயது ரதி குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்விவகாரத்தில் கோம்பாக் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்குப் புகாரைக் கொண்டு செல்லப்போவதாக மலேசிய தமிழர் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஈஸ்வரி சுப்பிரமணியம் எச்சரித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு வேன் ஓட்டுநர் மற்றும் வேனுக்கு சொந்தமான சாய் ஆனந்தா அறக்கட்டளை ஆசிரமம் தார்மீகப்பொறுப்பேற்க வேண்டும் என்று ஈஸ்வரி வலிறுத்துகிறார்.









