கோலாலம்பூர், நவம்பர்.22-
முன்னாள் கணவரின் பிடியில் உள்ள இந்திராகாந்தியின் மகள் பிரசன்னா டிக்ஷாவைக் கண்டுபிடிக்க போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சமூக ஆர்வலர்கள் சிலர் இன்று சனிக்கிழமை ஒன்று கூடினர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இந்தத் தேடல் நடவடிக்கை குறித்து கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்திய அவர்கள், பிடிஆர்எம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோஷமிட்டனர்.
பிரசன்னா டிக்ஷா, குழந்தையாக தனது தாயார் இந்திராகாந்தியுடன் இருக்கும் புகைப்படங்கள் கொண்ட பதாகைகளை கையில் ஏந்தியிருந்த அவர்கள், நீதிமன்ற உத்தரவை உடனடியாகச் செயல்படுத்துமாறு அதிகாரிகளை வலியுறுத்தினர்.
இதனிடையே, இன்று மதியம் தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயிலைத் தாங்கள் சந்திக்கவுள்ளதாக இந்திராகாந்திக்கு ஆதரவாக குரல் எழுப்பி வரும், சமூக ஆர்வலர்கள் குழுவின் தலைவர் அருண் துரைசாமி தெரிவித்துள்ளார்.








