Apr 30, 2026
Thisaigal NewsYouTube
மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்
தற்போதைய செய்திகள்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

Share:

நாட்டின் பி40 பிரிவைச் சேர்ந்த தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களின் ஆரம்பக் கல்வியை வலுப்படுத்தும் நோக்கில், 'செலிக் மடானி 2026' (CELIK MADANI 2026) எனும் மாபெரும் கல்வி மானியத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவு (மித்ரா) இன்று அறிவித்துள்ளது.

மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் மித்ரா, இவ்வாண்டு சுமார் 5,000 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 12.65 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் தகுதி பெறும் ஒவ்வொரு தமிழ்ப் பாலர் பள்ளி மாணவருக்கும் மாதந்தோறும் 150 ரிங்கிட் வரையிலான கல்விக் கட்டண மானியமும், 80 ரிங்கிட் காலை உணவு மானியமும் வழங்கப்படவுள்ளது.

இந்த மானியக் கோரிக்கையைச் சமர்ப்பிக்க விரும்பும் அனைத்து தனியார் தமிழ்ப் பாலர் பள்ளி நிர்வாகங்களும் மலேசியக் கல்வி அமைச்சின் கீழ் முறையாகப் பதிவு பெற்றிருப்பது அவசியமாகும்.

இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கும் மாணவர்கள் 4 முதல் 6 வயதுடைய இந்தியச் சிறுவர்களாக இருப்பதோடு அவர்களின் குடும்பம் பி40 பிரிவைச் சேர்ந்ததாக இருத்தல் வேண்டும்.

குறிப்பாக, சம்பந்தப்பட்ட பாலர் பள்ளி 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய பாலர் பள்ளி கலைத்திட்டத்தை (KP 2026) பின்பற்றுவதோடு, நடப்பு ஆண்டிற்கான செல்லுபடியாகும் பதிவுச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், தமிழ், மலாய் அல்லது ஆங்கில மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்ட பாலர் பள்ளிகள் மட்டுமே இத்திட்டத்திற்குத் தகுதியுடையவை ஆகும்.

அனைத்துப் பாலர் பள்ளிகளும் தங்களின் விவரங்களை தேசிய பாலர் பள்ளி தகவல் அமைப்பான SMPK-இல் புதுப்பித்திருப்பதோடு, பாலர் பள்ளி தர நிர்ணய ஸ்கோர் எனும் SKPK விவரங்களையும் சமர்ப்பித்திருக்க வேண்டும்.

இவற்றுடன் பெற்றோர் அல்லது பாதுகாவலரால் கையொப்பமிடப்பட்ட முறையான விண்ணப்பக் கடிதமும் இணைக்கப்பட வேண்டும். பொருளாதாரச் சூழல் காரணமாக எந்தவொரு இந்தியச் சிறுவனும் பாலர் பள்ளிக் கல்வியைத் தவறவிடக் கூடாது என்பதே அரசாங்கத்தின் இந்த உன்னத நோக்கமாகும்.

முழுமையற்ற அல்லது காலக்கெடுவுக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது என மித்ரா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

தகுதியுள்ள பாலர் பள்ளி நடத்துநர்கள் மற்றும் உரிமையாளர்கள் இதற்கான விண்ணப்பங்களை மே மாதம் 1-ஆம் தேதி (வெள்ளி) முதல் மே மாதம் 20-ஆம் தேதி (புதன்) வரை பிரத்தியேக கூகுள் படிவத்தின் வழியாக, இணையம் வாயிலாகச் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முன்பாக, இதற்கான விரிவான வழிகாட்டுதல்களை https://shorturl.at/F4Ula எனும் இணையப் பக்கத்தில் பாலர் பள்ளி நிர்வாகத்தினர் முறையாகச் சரிபார்த்து நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பம் தொடர்பான கூடுதல் விளக்கங்களுக்கு 03-8892 3442 எனும் தொலைபேசி எண்ணிலோ அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் வாயிலாகவோ மித்ரா அதிகாரிகளை அலுவலக நேரமான காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்பு கொண்டு பாலர் பள்ளி நிர்வாகத்தினர் விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News