Sep 26, 2026
Thisaigal NewsYouTube
தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி
தற்போதைய செய்திகள்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

Share:

மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் தொழிலாளர் வர்க்கம், நாட்டின் முதன்மை வளர்ச்சி நீரோட்டத்திலிருந்து ஒருபோதும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார்.

2026-ஆம் ஆண்டு தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தியில், ‘மடானி’ அரசாங்கத்தின் கீழ் உழைப்பாளர் நலன் மற்றும் சமூக நீதி ஆகிய இரண்டும் நாணயத்தின் இரு பக்கங்களாகக் கருதப்படுவதாகக் குறிப்பிட்டார்.

நாட்டின் கம்பீரமான கட்டிடங்களுக்கும் நவீனத் தொழில்நுட்பங்களுக்கும் பின்னால் தொழிலாளர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் மறைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், வெறும் பொருளாதார எண்களை மட்டும் உயர்த்தாமல் அந்த வளர்ச்சியின் பலன்கள் அடித்தட்டு தொழிலாளர்கள் வரை சமமாகச் சென்றடைவதை அரசாங்கம் உறுதி செய்வதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக, குறைந்தபட்ச ஊதிய உயர்வு மற்றும் நாட்டின் வரலாற்றிலேயே முதன்முறையாக ‘கிக்’ (Gig) தொழிலாளர்களுக்குச் சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்கும் புதிய சட்டம் ஆகியவை தொழிலாளர் நலனில் இந்த அரசாங்கத்திற்கு இருக்கும் தீர்க்கமான அக்கறையைப் பிரதிபலிக்கின்றன.

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தானியங்கி மயமாக்கல் பெருகிவரும் தற்போதைய சூழலில், மலேசியத் தொழிலாளர்கள் வெறும் தொழில்நுட்ப நுகர்வோராக மட்டும் இருக்காமல், அவற்றை உருவாக்குபவர்களாகவும் அத்துறையில் முன்னிலை வகிப்பவர்களாகவும் உருமாற வேண்டும் என்பதே இலக்காகும். இதற்காக 13-வது மலேசியத் திட்டத்தின் (RMKe-13) கீழ், தொழிலாளர்களுக்குத் தேவையான நவீன திறன் பயிற்சிகள் மற்றும் மறுதிறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மிகத்தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தொழிலாளர் பாதுகாப்பு என்பது வெறும் பணியிடத்தோடு மட்டும் நின்றுவிடாமல், அவர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் தனிமனித கண்ணியத்தையும் பாதுகாப்பதே அமைச்சின் மேலான நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“Pekerja MADANI, KESUMA Bangsa” என்ற இவ்வாண்டின் கருப்பொருளுக்கிணங்க, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் உழைப்பால் உயரும் ஒவ்வொரு கரத்தையும் எவ்விதப் பாகுபாடுமின்றி கண்ணியத்துடன் பாதுகாக்கும் என்று அமைச்சர் ரமணன் தனது உரையில் உறுதிபடத் தெரிவித்தார்.

Related News