புற்றாஜெயா, செப்டம்பர்.12-
போலீசாருக்கும் குடியிருப்பாளர்களுக்கும் இடையில் மோதலுக்கு வித்திட்ட கம்போங் சுங்கை பாரு நிலப்பகுதிக்கு சொந்தமானவர்களுக்கு இதுவரையில் 62.57 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள இழப்பீடு வழங்கப்பட்டு விட்டதாக அப்பகுதியை மேம்படுத்தவிருக்கும் மேம்பாட்டாளர் நிறுவனமான கம்போங் பாரு மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாகத் தலைமை அதிகாரி டாக்டர் கைருல் நிஸாம் ஒத்மான் தெரிவித்தார்.
1960 ஆம் ஆண்டு நில ஆர்ஜீத சட்டத்தின் கீழ் கூட்டரசு பிரதேச நில மற்றும் கனிம வள இலாகா, இந்த இழப்பீட்டை மதிப்பீடு செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
110 யூனிட்டுகள், 72 அடுக்குப் பகுதிகள், 37 தரை வீடுகள், தெனாகா நேஷனல் பெர்ஹாட்டுக்குச் சொந்தமான ஒரு துணை மின் நிலையம் ஆகியவை அப்பகுதியில் அடையாளம் காணப்பட்டதாக அவர் விவரித்தார்.
நிலத்தின் மதிப்பு, பராமரிப்பு உரிமை, இடம் மாறிச் செல்வதற்கான செலவினம், தற்காலிமாக தங்கியிருப்பதற்கான வாடகை, வருமான இழப்பு, வழக்கிற்கு ஆஜராகிய செலவினம் முதலியவை இந்த இழப்பீட்டில் கருத்தில் கொள்ளப்பட்டதாக டாக்டர் கைருல் நிஸாம் விவரித்தார்.








