
முஸ்லிம் தொழில்முனைவோரின் பங்களிப்பை வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் முஸ்லிம் பொருளாதார மேம்பாட்டு நிகழ்ச்சி நிரலான APEM (ஆபெம்) 2026 மாநாட்டை தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சான, KUSKOP (குஸ்கோப் ) வரவேற்பதாக அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
இன்று பினாங்கு செபராங் பிறை தி லைட் தங்கும் விடுதியில் பினாங்கு மாநில லீகா முஸ்லிம் இயக்கத்தின் ஏற்பாட்டில் Agenda Pembangunan Ekonomi Muslim எனும் ஆபெம் 3.0 நிகழ்விற்கு தலைமையேற்று உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொழில்முனைவோருக்கு நிதி மட்டுமின்றி வழிகாட்டுதல், சந்தை வாய்ப்புகள், தொழில்நுட்பம் மற்றும் வணிக வலையமைப்பும் அவசியம் எனக் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மூலம் நிதி மற்றும் சந்தை அணுகல், தொடர்ச்சியான பயிற்சி, டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு மாற்றம், வணிக இணைப்பு மற்றும் தொழில் விரிவாக்கம் ஆகிய ஐந்து முக்கிய முயற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.
தொடர்ந்து, பவர்ஆப் 10K திட்டத்தின் கீழ் 15 பில்லியன் ரிங்கிட் நிதியில், ஜூலை 2026 வரை 9 பில்லியன் ரிங்கிட் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்திய முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் பினாங்கு மாநிலத்தில் பொருளாதாரத்தில் தனித்துவமாக விளங்கியவர்கள் என்றும் பலத்த கைத்தட்டல்கள் மத்தியில் ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.
இந்திய முஸ்லிம்கள், இந்தியத் துணைக்கண்டத்திலும், மலாய் தீவுக் கூட்டப் பிராந்தியத்திலும் முக்கியமான பொருளாதார சக்திகளில் ஒன்றாக விளங்கியிருக்கிறார்கள். இதை தாம் தயக்கமின்றி வெளிப்படையாகக் கூறுவதாகத் தெரிவித்த அவர், இதற்கு வரலாறே சான்று என்றும் கூறினார்.
‘சுலாலத்துஸ் சலாத்தின்’ (Sulalatus Salatin) எனப்படும் மலாய் வரலாற்று நூலை தாம் வாசித்திருப்பதாகக் கூறிய ஸ்டீவன் சிம், அதில் குறிப்பிடப்படும் மணி புரிந்தன் என்ற இந்திய முஸ்லிம் வணிகர், மலாக்கா அரச குடும்பத்துடனான அவரது தொடர்பும், இந்திய முஸ்லிம்களின் வரலாற்றுப் பங்களிப்பும் உதாரணமாகச் சுட்டிக் காட்டப்பட்டிருப்பதை ஸ்டீவன் சிம் தமது உரையில் பகிர்ந்து கொண்டார்.
அமைச்சுக்கள், அரசாங்க நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், கூட்டுறவுத் துறை மற்றும் தொழில்துறையினருடன் அப்பெண் ஏற்பாட்டாளர்கள் வலுவான ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்த முயற்சிகள் மூலம் முஸ்லிம் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் பொருளாதாரத் திறன் வலுப் பெறுவதுடன், தேசியப் பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பை மேலும் அதிகரிக்க முடியும் என்றும் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் ஆபெம் 3.0 தலைவர் டத்தோ ஹாஜி நஜிமுடின் காதீர் மற்றும் இந்திய முஸ்லிம் வணிகர்கள் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.







