Aug 15, 2026
Thisaigal NewsYouTube
கைவிட்டப்பட்ட பிராணிகள் உள்ளிட்ட அனைத்து விலங்குகளிடமும் இரக்கம் காட்ட வேண்டும் - சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

கைவிட்டப்பட்ட பிராணிகள் உள்ளிட்ட அனைத்து விலங்குகளிடமும் இரக்கம் காட்ட வேண்டும் - சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்து

Share:

தெருவில் கைவிடப்பட்ட நிலையில் சுற்றித் திரியும் நாய், பூனை உள்ளிட்ட அனைத்து பிராணிகள் மற்றும் வனவிலங்குகளிடமும் முஸ்லிம்கள் எப்போதும் இரக்கத்துடனும் அன்புடனும் நடந்துகொள்ள வேண்டும் என மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா வலியுறுத்தியுள்ளார்.

சிலாங்கூர் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழுகையின்போது ‘அல்லாஹ்வின் படைப்புகளிடம் இரக்கம் காட்டுதல்’ என்ற தலைப்பில் வழங்கப்பட்ட பிரசங்கத்தின் கருத்துகளை மக்கள் சிந்தித்து புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதேவேளையில் சிலாங்கூர் அரண்மனையின் முகநூல் பதிவில், பூமியின் பாதுகாவலர்களான மனிதர்களுக்கு சுற்றுச்சூழலை பொறுப்புடன் பராமரித்து, பாதுகாத்து நிர்வகிக்கும் மிகப்பெரிய கடமை உள்ளது என்றும் சுல்தான் ஷராபுடின் குறிப்பிட்டுள்ளார்.

இதில் விலங்குகள், தாவரங்கள், மலைகள், கடல்கள் மற்றும் ஆறுகளும் அடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவை அனைத்தும் அல்லாஹ்வின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் அடையாளங்கள் என்றும், அவற்றின் நிலைத்தன்மை பாதுகாக்கப்பட்டு பேணப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் இடையிலான உறவு எப்போதும் இரக்கம் மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும் சுல்தான் வலியுறுத்தியுள்ளார்.

Related News