Aug 15, 2026
Thisaigal NewsYouTube
ஹெலிகாப்டர் வெடித்து தீப்பற்றியது – நால்வர் உயிர் தப்பினர்
தற்போதைய செய்திகள்

ஹெலிகாப்டர் வெடித்து தீப்பற்றியது – நால்வர் உயிர் தப்பினர்

Share:

சுபாங், சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா விமான நிலையத்தில் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று திடீரென வெடித்துத் தீப்பற்றியதில், அதில் இருந்த நால்வரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இன்று நண்பகல், 12.15 மணியளவில் விமான நிலையத்திலுள்ள கார்பன் எம்ஆர்ஓ பகுதியில், பழுது பார்க்கும் பணிக்குப் பின்னர் என்ஜின் சோதனைக்காக ஹெலிகாப்டர் புறப்படத் தயாரான போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

சம்பவம் தொடர்பாக நண்பகல் 12.30 மணிக்கு சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு அவசர அழைப்பு கிடைத்தது.

தகவல் கிடைத்த நான்கு நிமிடங்களிலேயே, புக்கிட் ஜெலுத்தோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஐந்து வீரர்கள் தீயணைப்பு வாகனத்துடன் சம்பவ இடத்தைச் சென்றடைந்தனர்.

ஆனால், தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்ற போது ஹெலிகாப்டர் முழுமையாக தீக்கிரையாகியிருந்தது.

எனினும், தீப்பற்றிய போது அதில் இருந்த நால்வரும் தங்களால் முடிந்த வரை விரைந்து வெளியேறி உயிர் தப்பியதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

தீயை அணைக்கும் பணியில் விமான நிலைய தீயணைப்பு வீரர்களும் இணைந்தனர்.

Related News