புக்கிட் மெர்தாஜாம், டிசம்பர்.21-
பினாங்கு, பிறையில் உள்ள ஒரு கொள்கலன் பட்டறையில் இன்று அதிகாலை 1 மணியளவில் அதிரடியாக நுழைந்த காவற்படையினர், துப்பாக்கி, தோட்டாக்கள், கட்டுக் கட்டாகப் போதைப் பொருட்களைப் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து இரண்டு வெளிநாட்டினரை மடக்கிப் பிடித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரது கால்சட்டைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த revolver 0.38 வகைத் துப்பாக்கியையும், அங்கிருந்த ஒரு பொம்மைக்குள் ரகசியமாக ஒளித்து வைக்கப்பட்டிருந்த 21 தோட்டாக்களையும் கண்டு காவற்படையினர் அதிர்ச்சியடைந்தனர்.
சோதனையின் போது methamphetamine, கஞ்சா உள்ளிட்ட சுமார் ஒரு கிலோவிற்கும் அதிகமான போதைப் பொருட்களுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட நிசான் அல்மேரா காரையும் பறிமுதல் செய்ததாக செபராங் பிறை தெங்கா மாவட்டக் காவற்படைத் தலைவர் ஏசிபி ஹெல்மி அரிஸ் தெரிவித்தார். பயங்கர ஆயுதங்கள், போதைப் பொருள் கடத்தல் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கைதான இருவரும் வரும் டிசம்பர் 27-ஆம் தேதி வரை 7 நாட்கள் தடுப்புக் காவலில் விசாரிக்கப்படவுள்ளனர்.








