குவாந்தான், செப்டம்பர்.15-
பகாங், ரவூப்பில் உள்ள கல்லுடைப்புப் பகுதியில் பாறை சரிந்து விழுந்த சம்பவத்தில் புதையுண்டதாகக் கூறப்படும் மண்வாரி இயந்திரத்தின் ஓட்டுநரைத் தேடி மீட்கும் நடவடிக்கை மூன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில் தேடுதல் பகுதி மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
நேற்று மாலை 7.00 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கை காலை 7.50 மணியளவில் மீண்டும் தொடங்கப்பட்டதாக பகாங் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை மற்றும் மீட்புப் பிரிவு உதவி இயக்குநர் முகமட் சலாவுடின் இசா கூறினார்.
இன்றைய நடவடிக்கையில் டென்டி என்ற மோப்ப நாய் பயன்படுத்தப்பட்டதோடு கட்டமைப்பு அசைவுகளைக் கண்டறியும் உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு மலேசிய சிவில் பாதுகாப்புப் படையின் உதவியும் நாடப்பட்டதாக அவர் கூறினார்.
பெரிய பாறைகள், மண் நகர்வு மற்றும் பாறைகளை அகற்றுவது போன்றவை மீட்புக் குழு எதிர்நோக்கும் முக்கியச் சவாலாக உள்ளன. இது தேடுதல் நடவடிக்கையின் போது நிலச்சரிவு அபாயத்தை அதிகரிக்கிறது என்று பெர்னாமா தொடர்பு கொண்ட போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.








