Apr 10, 2026
Thisaigal NewsYouTube
டிஜிட்டல் மாற்றத்திற்கு ஏற்ப தமிழ் ஊடகவியலாளர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்: தொடர்புத்துறை அமைச்சு அறிவுறுத்தல்
தற்போதைய செய்திகள்

டிஜிட்டல் மாற்றத்திற்கு ஏற்ப தமிழ் ஊடகவியலாளர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்: தொடர்புத்துறை அமைச்சு அறிவுறுத்தல்

Share:

தொடர்புத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் துன் அப்துல் ரசாக் ஒளிபரப்பு மற்றும் தகவல் கழகம் (IPPTAR) ஏற்பாடு செய்த தமிழ் ஊடகவியலாளர்களுக்கான மூன்று நாள் பயிற்சிப் பட்டறை இன்று வெள்ளிக்கிழமை பினாங்கு, பேவியூ ஹோட்டலில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

இந்த நிறைவு விழாவில் தொடர்புத்துறை அமைச்சின் துணை தலைமைச் செயலாளர் மனோ வீரபத்ரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், "முன்பு அச்சு ஊடகங்களை மட்டுமே செய்திகளுக்காகச் சார்ந்திருந்த காலம் மாறி, இன்று டிஜிட்டல் யுகத்தில் எங்கும் ஊடகவியலாளர்கள் பெருகிவிட்ட சூழல் நிலவுகிறது. இத்தகைய வேகமான மாற்றங்களுக்கு ஏற்ப தமிழ் ஊடகவியலாளர்கள் தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்வது அவசியம்," என்று வலியுறுத்தினார்.

ஊடகவியலாளர்களுக்குத் தேவையான நவீன ஆற்றலையும், தொழில்நுட்ப அறிவையும் வழங்கும் நோக்கிலேயே இப்தார் நிறுவனம் இந்தப் பயிற்சிப் பட்டறையை முன்னெடுத்ததாக மனோ வீரபத்ரன் குறிப்பிட்டார்.

"தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் AI செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வரவு ஊடகத் துறைக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளதுடன், அச்சு ஊடகங்களின் வருவாய் மற்றும் இருப்புக்கு அச்சுறுத்தலாகவும் அமைந்துள்ளது என்று நிகழ்விற்கு சிறப்பு வருகை புரிந்த IPPTAR இயக்குநர் டத்தோ ரோஸ்லான் அரிப்பின் தெரிவித்தார்.

முறையான அங்கீகாரம் இல்லாத நபர்கள் செய்தியாளர்களாகச் செயல்படுவதால் தவறான செய்திகள் பரவுவதையும், இதனால் ஊடக நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளையும் சுட்டிக்காட்டிய அவர், இந்த சவால்களைச் சமாளிக்க ஊடகவியலாளர்கள் AI தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்வது அவசியம் என்றார். இருப்பினும், AI என்பது ஒருபோதும் ஊடகவியலாளர்களுக்கு மாற்றாக அமையாது என்றும், மாறாக செய்திகளின் தரத்தை உயர்த்தவும், பணிச் சுமையைக் குறைக்கவும் ஒரு துணைக் கருவியாகவே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் டத்தோ ரோஸ்லான் அரிப்பின் வலியுறுத்தினார்."

தகவல் அதிகாரி சசிதரன் லோகநாதன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த மூன்று நாள் பயிற்சியில் ஆங்கில செய்திவாசிப்பாளரும், விரிவுரையாளருமான டாக்டர் மோகனப்பிரியா சின்னராஜா, பயிற்றுநர் மு. தியாகராஜன் உட்பட ஊடகத்துறையில் பரந்த அனுபவம் கொண்டவர்களால் நடத்தப்பட்ட இந்த பட்டறை, தமக்கு மிகுந்த பலனை ஏற்படுத்தியதாக திசைகள் செய்தியாளர் ஹேமா எம். எஸ். மணியம் விவரித்தார்.

"சுருக்கமாகக் கூறின், டிஜிட்டல் யுகத்தின் சவால்களை எதிர்கொள்ளவும், செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற நவீன தொழில்நுட்பங்களை ஊடகப் பணியில் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தவும் தமிழ் ஊடகவியலாளர்களுக்குப் போதிய பயிற்சியும் தன்னம்பிக்கையும் அளிப்பதே இப்பட்டறையின் பிரதான நோக்கமாகும். மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சி, செய்திகளின் நம்பகத்தன்மையைப் பேணவும், மாறிவரும் ஊடகச் சூழலுக்கு ஏற்பத் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைந்ததுடன், சமூகத்திற்கு உயர்தரமான செய்திகளை வழங்கும் ஆற்றலையும் அவர்களுக்குப் பெற்றுத் தந்துள்ளது.

Related News