கோலாலம்பூர், நவம்பர்.10-
கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் மீண்டும் நில அமிழ்வு நிகழ்ந்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
ஜாலான் மஸ்ஜிட் இந்தியா, ஜாலான் போனஸ் சாலையில் மேற்பரப்பில் ஆழமான குழி ஏற்பட்டது. கோலாலம்பூர் மாநகர் மன்ற திட்டமிடலின் ஊடகப் பிரிவு வெளியிட்ட தகவலின்படி இந்த நில அமிழ்வு இன்று காலை 8.30 மணியளவில் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
குழி ஏற்பட்டதற்கானக் காரணத்தைக் கண்டறிவதற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம், Air Selangor, Indah Water Konsortium மற்றும் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகம் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு Lorong Masjid India 4 இல் தொடங்கி, நில அமிழ்வு ஏற்பட்ட பகுதி வரை ஜாலான் மஸ்ஜிட் இந்தியா சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அனைத்து வகையான வாகனங்களும் வேறு சாலையை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளன.
மழை காலத்தில் பொது மக்களின் பாதுகாப்பே முக்கியம் என்று கோலாலம்பூர் மாநகர் மன்றம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








