ஜோகூர் பாரு, ஜூலை.23-
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 4 ஆயிரம் ரிங்கிட் கையூட்டாகப் பெற்றதாக மலாக்கா மாநில இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை முன்னாள் இயக்குநர், ஜோகூர் பாரு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
51 வயது கைருல் அட்ரி ரொஸ்லி என்ற அந்த முன்னாள் இயக்குநர் நீதிபதி டத்தோ அஷ்மாட் கமால் அரிஃபின் இஸ்மாயில் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரிக்கும், பிப்ரவரிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஜோகூர், தம்போய் மற்றும் பெர்மாஸ் என்ற இரு வெவ்வேறு இடங்களில் அந்த முன்னாள் இயக்குநர் இக்குற்றத்தைப் புரிந்துள்ளதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








