அலோர் ஸ்டார், ஜூன்.07-
கெடா மாநில சட்டமன்றத்தின் முன்னாள் துணை சபாநாயகர் ஜமில் இட்ரோஸ், ஜாலான் தண்டோப் அருகிலுள்ள சுங்கை தெலுக் பாகான் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று காலை சுமார் 8.10 மணியளவில், 78 வயதான ஜமில் இட்ரோஸ், ஆற்றில் இறந்த நிலையில் காணப்பட்டதையடுத்து, அவரது உடல் மீட்கப்பட்டதாக கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் சையிட் பஸ்ரி சையிட் அலி தெரிவித்துள்ளார்.
ஜமில் இட்ரோஸ் ஆற்றில் விழுந்ததாக நம்பப்படும் இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், ஆற்றங்கரையில் அவரது செருப்புகள் மீட்கப்பட்டதாகவும் சையிட் பஸ்ரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜமில் இட்ரோஸ் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்த நிலையில், அவருக்கு நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளும், நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.








