பாசீர் மாஸ், ஜூலை.24-
7 மாதக் கர்ப்பிணி மாது சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பில் கடந்த மூன்று ஆண்டு காலமாக போலீசாரால் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நடந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட தீவிரத் தேடுதல் வேட்டையில் நேற்று புதன்கிழமை இரவு 7 மணியளவில் கிளந்தான், பாசீர் மாஸ், கம்போங் புக்கிட் லாத்தா என்ற இடத்தில் பொது நடவடிக்கைப் பிரிவு போலீசார் மூலம் 24 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவரும், அவரின் நண்பரும் பிடிபட்டனர்.
அந்த இரு நபர்களும் சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர்கள் போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக பாசீர் மாஸ் மாவட்ட போலீஸ் தலைவர் காமா அஸூரால் முகமட் தெரிவித்தார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 26 வயது கர்ப்பிணி மாது, பாசீர் மாஸ், ஜாலான் கம்போங் ரேபேக் என்ற இடத்தில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு காரில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக காமா அஸூரால் குறிப்பிட்டார்.








