கோலாலம்பூர், பிப்ரவரி.08-
நாட்டில், குறிப்பாக வடக்கு மாநிலங்களில் நிலவும் வெப்பமான வானிலையைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் உடைகளையும் செயல்பாடுகள் குறித்தும் முடிவெடுக்கும் அதிகாரம் பள்ளி நிர்வாகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாகக் கல்வி அமைச்சு ஏற்கனவே வழங்கியுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, நிலவும் சூழலுக்கு ஏற்ப பள்ளித் தலைமை ஆசிரியர்களும் நிர்வாகிகளும் அவ்வப்போது முடிவுகளை எடுக்கலாம் என அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் குறிப்பிட்டார்.
வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியாவும் சுகாதார அமைச்சும் வழங்கும் அறிவுறுத்தல்களையும் எச்சரிக்கைகளையும் தொடர்ந்து கவனித்துச் செயல்படுமாறு பள்ளி நிர்வாகங்களை அவர் கேட்டுக் கொண்டார். குறிப்பாகக் கடும் வெப்பம் நிலவும் பகுதிகளில், வகுப்பிற்கு வெளியிலான செயல்பாடுகளைக் குறைப்பதற்கும் வசதியான உடைகளை அணிவதற்கும் ஏற்கனவே உள்ள விதிமுறைகள் அனுமதி அளிக்கின்றன என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.








