Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கோவில் திருவிழாவில் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட சம்பவம்: குத்தகையாளர் சிவகுமரன் குற்றஞ்சாட்டப்பட்டார்
தற்போதைய செய்திகள்

கோவில் திருவிழாவில் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட சம்பவம்: குத்தகையாளர் சிவகுமரன் குற்றஞ்சாட்டப்பட்டார்

Share:

கோல சிலாங்கூர், செப்டம்பர்.04-

கோவிலின் வருடாந்திரத் திருவிழாவின் போது, பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஆலய வெளி வளாகத்தில் பக்தர்களுடன் பக்தராக நின்று கொண்டு, வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டதாகக் குத்தகையாளர் ஒருவர் கோல சிலாங்கூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

55 வயதுடைய P. சிவகுமரன் என்று அந்த குத்தகையாளர் மாஜிஸ்திரேட் இப்ராஹிம் குலாம் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி மெர்டெக்கா தினத்தன்று காலை 11.30 மணியளவில் கோல சிலாங்கூர், பெர்தாரி ஜெயா, புக்கிட் பாடோங் தோட்டத்தில் ஸ்ரீ முனியாண்டி சுவாமி கோவிலில் நடைபெற்ற திருவிழாவின் போது கைதுப்பாக்கியால் வானை நோக்கிப் பல முறை சுட்டதாக சிவகுமரன் குற்றஞ்சாட்டப்பட்டார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு சிறை அல்லது 2 ஆயிரம் ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 1960 ஆம் ஆண்டு சுடும் ஆயுதம் சட்டம் 39 பிரிவின் கீழ் சிவகுமரன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

எனினும் தனக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து சிவகுமரன் விசாரணை கோரியுள்ளார்.

ஆலயத் திருவிழாவின் போது மக்கள் கூடியிருக்கின்ற ஓர் இடத்தில் வானை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியது கடுமையானக் குற்றம் என்பதால், பொதுமக்கள் நலன் கருதி அந்த நபருக்கு 5 ஆயிரம் ரிங்கிட் ஜாமீன் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அரசு தரப்பில் ஆஜரான துணை பப்ளிக் பிராசிகியூட்டர் ஸாகி ஸாஹிட் Zaki Zahid நிதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

எனினும் தனது கட்சிக்காரர் ஆஸ்துமா நோய் உட்பட பல்வேறு உபாதைகளை எதிர்நோக்கியிருப்பதாலும், போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியிருப்பதாலும், அவருக்கு குறைந்த ஜாமீன் தொகை அனுமதிக்கும்படி சிவகுமரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஐயாசாமிவேலு கேட்டுக் கொண்டார்.

இரு தரப்பின் வாதங்களையும் செவிமடுத்த மாஜிஸ்திரேட் இப்ராஹிம் குலாம், குற்றஞ்சாட்டப்பட்ட சிவகுமரனை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 2,500 ரிங்கிட் ஜாமீனில் விடுவிப்பதாகத் தெரிவித்தார்.

இவ்வழக்கு மீதான விசாரணை வரும் அக்டேபார் 7 ஆம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Related News