புத்ராஜெயா, ஆகஸ்ட்.14-
கிள்ளானில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் விஷயத்தை உட்கொண்டு இருக்கலாம் என்று நம்பப்படும் ஐந்தாம் படிவ மாணவி ஜி. ஷர்வினா மரணத்தில் அலட்சியப் போக்கு, அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் லஞ்சம் சம்பந்தப்பட்டுள்ளதாக அந்த மாணவியின் பெற்றோர், இன்று புத்ராஜெயாவில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் புகார் செய்துள்ளனர்.
மலேசிய இந்து ஆகம அணியின் பொறுப்பாளர் அருண் துரைசாமியின் உதவியுடன் ஷர்வினாவின் பெற்றோர் இந்தப் புகாரை அளித்துள்ளனர்.
அந்த மாணவி மரணமுற்றது தொடர்பில் மிக முக்கியமான தகவல்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அருண் துரைசாமி, விசாரணையில் மிகப் பெரிய முறைகேடுகள் நிகழ்ந்து இருப்பதால் இது குறித்து எஸ்பிஆர்எம் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக, மாணவி ஷர்வினா பயின்ற பள்ளிக்கும், கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கும் வெறும் 15 நிமிடமே பயண நேரம் என்ற பட்சத்தில் அந்த மாணவியின் வாயில் நுரைத் தள்ளும் வரையில் பள்ளி வளாகத்திலேயே அவர் கிடத்தி வைக்கப்பட்டுள்ளார்.
அதே வேளையில் பள்ளிக்கும் அருகில் உள்ள கிளினிக்கிற்கும் ஒரு நிமிட பயண நேரம் இருக்கும் பட்சத்தில் அந்த மாணவியைக் காப்பாற்றுவதற்கு கூப்பிடும் தூரம் உள்ள கிளினிக்கிற்குக் கொண்டுச் செல்ல பள்ளி நிர்வாகம் எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை என்று அருண் துரைசாமி குறிப்பிட்டார்.
அப்பள்ளியின் எஸ்ஓபி நடைமுறையைக் காரணம் காட்டி, மாணவியின் தந்தை பள்ளியை வந்தடையும் வரை அந்தப் பெண்ணுக்கு எந்தவொரு முதலுதவி சிகிச்சை அளிக்கப்படாதது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உள்ளது என்று அருண் துரைசாமி குறிப்பிட்டார்.
கடந்த மே 27 ஆம் தேதி நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் எந்தவொரு மேல் நடவடிக்கையும் இல்லை என்று கூறி, அரச மலேசியப் போலீஸ் படை, விசாரணை அறிக்கையை மூடியது பல்வேறு சநந்தேகங்களுக்கு இடம் அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக எஸ்பிஆர்எம் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மாணவியின் தாயார் பி. மகேஸ்வரி சார்பில் அருண் துரைசாமி, இன்று புகார் அளித்துள்ளார்.








