கோலாலம்பூர், ஜனவரி.23-
சர்ச்சைக்குரிய நகர்ப்புற மறுமேம்பாட்டு சட்ட மசோதாவை மீட்டுக் கொள்ள அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த மசோதாவில் தேவையான திருத்தங்கள் மற்றும் மேம்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே இது மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அரசாங்கச் செய்தித் தொடர்பாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ ஃபாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் குறிப்பாக அம்னோ தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்ட கவலைகள் மற்றும் ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது, எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளும் தரப்பில் உள்ள பாரிசான் நேஷனல் மற்றும் பி.கே.ஆர் கட்சியைச் சேர்ந்த ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் இது நிறைவேற்றப்படாமல் இருந்தது.
பழைய மற்றும் பாழடைந்த நிலையில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை மறுசீரமைத்து, நகர்ப்புற வளர்ச்சியை மேம்படுத்துவதே இச்சட்டத்தின் முதன்மை நோக்கமாகும். இதில் மூன்று முக்கிய திட்டங்கள் முன்மொழியப்பட்டிருந்தன.
பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிதாகக் கட்டுதல், கைவிடப்பட்ட அல்லது பழுதடைந்த கட்டிடங்களைப் பழுது பார்த்து மேம்படுத்துதல் மற்றும் கட்டிடங்களை இடிக்காமல் ஒரு குறிப்பிட்ட பகுதியை நவீனப்படுத்துதல் ஆகியவைவே மூன்று முக்கியத் திட்டங்களாகும்.
வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தபடி, இந்த மசோதாவின் இரண்டாவது வாசிப்பு குறித்து பிரதமர் அன்வார் இப்ராஹிம் முடிவெடுப்பார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அமைச்சரவை இதனைத் தற்காலிகமாக மீட்டுக் கொண்டுள்ளது.








