கோலாலம்பூர், அக்டோபர்.23-
தீபாவளி திருநாளையொட்டி நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஓப் லஞ்சார் எனும் வாகனப் போக்குவரத்து மீதான போலீசாரின் சிறப்புச் சோதனை நடவடிக்கை அமலாக்கத்தில் உயிர்ப்பலி சம்பவங்கள் குறைந்துள்ளன. ஆனால், விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன என்று புக்கிட் அமான் தலைமையகத்தின் போக்குவரத்துப் போலீஸ் பிரிவின் இயக்குநர் டத்தோ ஶ்ரீ முகமட் யுஸ்ரி ஹசான் தெரிவித்தார்.
இந்தச் சோதனை கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கி, 21 ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்த ஐந்து நாட்களில் விபத்துகளின் எண்ணிக்கை எட்டாயிரத்து 940 ஆகப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இதே காலக் கட்டத்தில் எட்டாயிரத்து 498 ஆக விபத்துக்களின் எண்ணிக்கை பதிவுச் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.2 விழுக்காடு உயர்வாகும். மரண எண்ணிக்கை 82 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டில் இது 90 ஆக இருந்ததாக அவர் விளக்கினார்.








