கோலாலம்பூர், நவம்பர்.19-
தனது முன்னாள் கணவரின் பிடியில் உள்ள தனது மகள் பிரசன்னா டிக்ஷா மீட்கப்பட்டு, தன்னிடம் ஒப்படைக்கப்படுவாரோயால் அரசாங்கம் மற்றும் போலீஸ் துறைக்கு எதிராகத் தாம் தொடுத்துள்ள அனைத்து சிவில் வழக்குகளையும் கைவிடுவதாக ஒரு முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியையான எம். இந்திராகாந்தி அறிவித்துள்ளார்.
அத்துடன் வரும் நவம்பர் 22 ஆம் தேதி சனிக்கிழமை கோலாலம்பூர், SOGO-விலிருந்து புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்கு நீதி கேட்டுக் தாம் மேற்கொள்ளவிருக்கும் ஊர்வலத்தையும் கைவிடுவதற்கு இந்திராகாந்தி தயாராக இருப்பதாக இந்திராகாந்தி நடவடிக்கைக் குழுவின் தலைவர் அருண் துரைசாமி தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்ட நடவடிக்கைகளும், போராட்டங்களும் ஒரே நோக்கத்தை முன்நிறுத்தி நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்திராகாந்தியின் மகள் பிரசன்னா டிக்ஷாவை அவரின் தாயாரிடம் ஒன்று சேர்க்க வேண்டும். இது நடக்குமானால், அரசு மற்றும் போலீஸ் துறைக்கு எதிராக இந்திராகாந்தி மேற்கெண்டு வரும் அனைத்து சிவில் வழக்குகளும் மீட்டுக் கொள்ளப்படும் என்று கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அருண் துரைசாமி தெரிவித்தார்.








