பேரா, சுங்கை சிப்புட்டில் சைம் டார்பி் நிறுவனத்திற்கு சொந்தமான தோட்டங்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 10 ஏக்கர் நிலத்தில் குடியேற்ற விரைவு நடவடிக்கையை எடுக்க நில அலுவலகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 27 ஆண்டு கால போராட்டத்திற்கு இன்னும் தீர்வுப் பிறக்கவில்லை என்று மாநில தேசிய தோட்டத் தொழிற்சங்கமான NUPW பொதுச் செயலாளர் எம். குணாசன், பேராக் மாநில இந்திய விவகாரங்களுக்கான தலைவரும் ஆட்சிக் குழு உறுப்பினருமான டத்தோ சிவநேசனிடம் முன் வைத்த புகாரைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சைம் டார்பி நிறுவனம், சுங்கை சிப்புட்டில் உள்ள 39 தொழிலாளர்களுக்கு அந்த நிலத்தை ஒதுக்கீடு செய்தும் அது கிடப்பில் இருந்து வருகிறது.
அதற்கு தீர்வுக்காண பல நடவடிக்கை எடுத்தும் பயனளிக்கவில்லை என்பதால், நேற்று டத்தோ சிவநேசனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாக குணாசன் தெரிவித்தார்.
இந்நிலையில், இப்பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்க நில அலுவலக அதிகாரியிடம் சிவநேசன் கூறியுள்ளது, தங்களுக்கு நம்பிக்கை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இந்த விவகாரம் குறித்து கருத்துரைத்த டத்தோ சிவநேசன், இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சுங்கை சிப்புட்டில் சைம் டார்பி நிறுவனம் ஒதுக்கீடு செய்த அந்த நிலத்தில் 39 தொழிலாளர்களுக்கு நிலம் கிடைக்க மாநில தேசிய தோட்ட தொழிற்சங்க அதன் செயலாளர் குணாசன் தலைமையில் கடந்த 1999 ஆண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.









