ஜார்ஜ்டவுன், ஜனவரி.07-
கடந்த வாரம் பிறை டோல் சாவடியில், தனது காரை மோதி, மருத்துவர் ஒருவருக்குக் காயம் ஏற்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில், உணவக உரிமையாளர் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில், 32 வயதான கோர் வெய் யியாக் என்ற அந்த ஆடவர், நீதிபதி நூருல் ரஷிடா முஹமட் அகிட் முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
குற்றவியல் சட்டம் பிரிவு 324-ன் கீழ், விசாரணை செய்யப்பட்டு வரும் இவ்வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி, இரவு 11.30 மணியளவில், செபராங் பிறை தெங்காவிலுள்ள பிறை டோல் சாவடி அருகே இச்சம்பவம் நடந்ததாக, பாதிக்கப்பட்ட அவினாஷ் என்ற மருத்துவர் சார்பில் போலீஸ் புகார் அளிக்கப்பட்டது.
டோல் சாவடியின் தடுப்பு திறக்காத நிலையில், கோரின் காரைப் பின்னால் நகர்த்துமாறு அவினாஷ் கேட்டுக் கொண்டதில் ஏற்பட்ட தகறாரில், அவினாஷை மோதித் தள்ளும் எண்ணத்தோடு, கோர் தனது காரைச் செலுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், இவ்வழக்கில், வரும் மார்ச் 4-ஆம் தேதிக்குள், மருத்துவச் சான்றிதழ் மற்றும் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.








