நெகிரி செம்பிலான், தம்பின், தாமான் புக்கிட் ரியாவைச் சேர்ந்த தர்வீன் ராஜ், அவரின் ஆறு நண்பர்களால் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் பழைய பகையே என்பது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளியின் போது ஒரே தாமானைச் சேர்ந்த இளைஞர்கள், தங்கள் வீட்டின் அருகில் பட்டாசு வெடித்து, கூத்தும் கும்மாளமாக, ரகளைப் புரிந்தது குறித்து தர்வீன் ராஜ்ஜின் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்துள்ளனர்.
குறிப்பாக கடந்த ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளியின் போது அந்த இளைஞர்கள் அட்டகாசம் புரிந்துள்ளனர். அவர்களின் இந்த செயலை தர்வீன் ராஜ் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். ஆனால் அவர்கள் கேட்பதாக இல்லை. அதன் பின்னர் அந்த இளைஞர்களுக்கு எதிராக தர்வீன் ராஜ் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்துள்ளனர்.
இந்த போலீஸ் புகாருக்கு பிறகு அவர்கள் அனைவரையும் போலீசார் பிடித்து சென்றனர். இந்த சம்பவத்தினால் மனதிற்குள் வஞ்சம் வைத்திருந்த அந்த இளைஞர்கள், பழிவாங்கம் உணர்வுடன் தர்வீன் ராஜ்ஜை கொலை செய்துள்ளனர் என்பது பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஜைனோல் சமாஹ் தெரிவித்தார்.
தற்போது பிடிபட்டுள்ள 18க்கும் 26 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஆறு பேரும், தர்வீன் ராஜின் நண்பர்கள் ஆவார் என்று டத்தோ ஜைனோல் சமாஹ் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி காணாமல் போன தர்வீர் ராஜ், மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டு, சடலம் எரியூட்டப்பட்ட நிலையில் ஆறு நாள் கழித்து மலாக்கா, கெமூனிங், லாடாங் கெடேக், செம்பனைத் தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டதற்கான பின்னணி குறித்து வினவிய போது டத்தோ ஜைனோல் சமாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தர்வீன் கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி காலை 5.30 மணியளவில் தம்பின், தாமான் முத்தியாராவில் தர்வீன் ராஜ்ஜுடன் அந்த ஆறு நபர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளர். . அதற்கு முன்னதாக அந்த அறுவரும் , அவர்களில் ஒருவரின் தந்தைக்கு சொந்தமான புரோத்தோன் சாகா காரில் சென்ற மதுபானம் அருந்தியுள்ளனர்.
மதுபானம் அருந்திவிட்டு, மறுபடியும் தர்வீன் ராஜ்ஜை பார்ப்பதற்கு அந்த அறுவரும் வந்துள்ளனர்.
தர்வீன் ராஜ்ஜை மதுபானம் அருந்த சொல்லி வற்புறுத்தியிருக்கின்றனர். தர்வீன் ராஜ் மறுத்து விட்டதைத் தொடர்ந்து அவரை கண்மூடித்தனமாக அடித்திருக்கின்றனர். பின்னர் அவரை இழுத்து காருக்குள் போட்டுக்கொண்டு, ஓர் இடத்திற்கு சென்றுள்ளனர்.
அந்த இடத்தை சென்றடைந்தவுடன், காரை விட்டு தர்வீன் ராஜ்ஜை இறங்கி சொல்லி, சந்தேகப் பேர்வழி ஒருவன், காரின் பூத்தில் வைக்கப்பட்டிருந்த நீண்ட பாராங்கை எடுத்து தர்வீன் ராஜ்ஜை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளான் என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ஜைனோல் சமாஹ் தெரிவித்துள்ளார்.








