கோலாலம்பூர், ஆகஸ்ட்.18-
இந்தியர்களின் சமூகவியல் உருமாற்றுத் திட்டமான மித்ராவின் புதிய முன் முயற்சிக்குரிய பல உதவித் திட்டங்களைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவிப்பார் என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் 13 ஆவது மலேசியத் திட்டம் மீதான விவாதத்தை நிறைவு செய்து வைத்து உரையாற்றுகையில் டத்தோ ஶ்ரீ ரமணன், மித்ராவின் புதிய திட்டங்களைப் பிரதமர் அறிமுகப்படுத்தவிருப்பதாகக் குறிப்பிட்டார்.
மித்ராவின் இந்த முன்முயற்சிக்கான திட்டங்கள் வலுவான சமூக-பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், சமூகம் தொடர்ந்து ஆதரிக்கப்படுவதையும், தேசிய வளர்ச்சியிலிருந்து பயனடைவதையும் உறுதிச் செய்யும் என்றும் டத்தோ ஶ்ரீ ரமணன் கூறினார்.
இந்த நடவடிக்கைகள் யாவும் விரிவான தாக்கத்தின் அடிப்படையை உள்ளடக்கியதாகும். முற்போக்கான அணுகுமுறைகள் மூலம் நாட்டின் வளர்ச்சியில் ஒரு பங்காளியாக இந்திய சமூகத்தின் பங்கை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது என அவர் குறிப்பிட்டார்.
மித்ராவின் கீழ் புதிய முயற்சிகள் மற்றும் திட்டங்களை வடிவமைப்பதில் அரசாங்கம் ஆக்கப்பூர்வமான வியூகம் மற்றும் பயனுள்ள ஒரு புதிய அணுகுமுறையைப் பயன்படுத்தும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் கூறினார்.








