ஈப்போ, அக்டோபர்.17-
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் பேரா, தாப்பா, ஆர் & ஆர் ஓய்வுத் தளத்தில் ஒரு குடும்பத்தை மிரட்டிய நான்கு நபர்களைப் போலீசார் தேடி வருவதாக பேரா மாநில போலீஸ் துணைத் தலைவர் துணை கமிஷனர் முகமட் அஸ்லின் சடாரி தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடார்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வேளையில் இந்த மிரட்டலில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரண்டு வெவ்வேறு வாகனங்களில் பயணம் செய்த இரண்டு ஆண்களையும், இரண்டு பெண்களையும் போலீசார் தேடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார். தனது காரை இரண்டு வாகனமோட்டிகள், கோல கங்சார் அருகில் மெனோரா சுரங்கப் பாதையிலிருந்து துரத்திக் கொண்டு வந்ததாகவும், தாப்பா, ஆர் & ஆர் ஓய்வுத் தளத்தில் காரை நிறுத்தும்படி அவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்ததாகவும் அந்த வாகனமோட்டி தனது போலீஸ் புகார் செய்துள்ளார்.
ஓய்வுத் தளத்தில் காரை நிறுத்திய பின்னர் அந்த இரண்டு கார்களிலிருந்து இறங்கிய இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களும், தனது காரை நோக்கி வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களின் வாகனங்களை தமது கார் முந்திச் சென்றது குறித்து கேள்வி எழுப்பியதுடன் தம்மையும், தனது குடும்ப உறுப்பினர்களையும் கடுமையாக மிரட்டியப் பின்னர் 180 ரிங்கிட்டைப் பறித்து கொண்டு அவர்கள் அங்கிருந்து சென்றதாக அந்த நபர் போலீசில் புகார் செய்துள்ளார் என்று துணை கமிஷனர் முகமட் அஸ்லின் தெரிவித்துள்ளார்.








