மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமைத் தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ ஷுஹைலி ஸையின் தங்களைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டியுள்ள இரண்டு போலீஸ் அதிகாரிகள், உடல் காயங்கள் மற்றும் மன உளைச்சலுக்காக இழப்பீடு கோரி சிவில் வழக்குத் தொடரவுள்ளனர்.
மருத்துவ அறிக்கைகள் கிடைத்த ஏழு நாள்களுக்குள் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று அவர்களின் வழக்கறிஞர் கமால் ஹிஷாம் ஜாஃபார் தெரிவித்துள்ளார். இழப்பீட்டுத் தொகை, மருத்துவ அறிக்கைகளைப் பெற்று மதிப்பீடு செய்த பின்னர் தீர்மானிக்கப்படும்.
இந்த சம்பவத்தால் ஒரு போலீஸ் அதிகாரி மன உளைச்சலுக்கு ஆளாகி, மனநல மருத்துவச் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இருவருக்கும் இலவசமாகச் சட்ட உதவி வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில், கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் முனையம் 1-இல் இரண்டு போலீஸ் அதிகாரிகளை அடித்துக் காயப்படுத்தியதாகச் சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளையும் ஷுஹைலி மறுத்து, இன்று சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணை கோரியுள்ளார்.








