SRC International லஞ்ச ஊழல் வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக்கிற்கு மன்னிப்பு வழங்கப்பட்டு, அவர் விடுதலை செய்யப்படுவாரேயானால் நடப்பு அரசாங்கம் கவிழலாம் என்று மூத்த அரசியவாதி லிம் கிட் சியாங் எச்சரித்துள்ளார்.
கைதி ஒருவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமானால் அவருக்கு விதிக்கப்பட்ட மொத்த சிறைத் தண்டனை ஆண்டுகளில் மூன்றில் ஒரு பகுதியைச் சிறையில் அனுபவித்து இருக்க வேண்டும். அதன் பின்னரே அவருக்கு மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க முடியும் என்று நடப்பு சட்டம் கூறுகிறது.
லஞ்ச ஊழல் குற்றத்திற்காக கடந்த 1977 ஆம் ஆண்டில் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சிலாங்கூர் முன்னாள் மந்திரி பெசாரும், அம்னோவின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவருமான ஹருன் இட்ரீஸ், பொது மன்னிப்பின் வாயிலாக மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பின்னர் அரச மன்னிப்பு வாயிலாக விடுவிக்கப்பட்டார்.
நெகிரி செம்பிலான், கெமஞ்சே சட்டமன்ற உறுப்பினரும், மாநில சட்மன்ற சபாநாயகருமான அப்துல் தஹா தலிப்பை கொலை செய்த குற்றத்திற்காக 1982 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அம்னோ முன்னாள் உதவித் தலைவரும், முன்னாள் கலை, பண்பாடு, இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சருமான மொக்தார் ஹஷிம், 9 ஆண்டுகள் சிறை வாசத்திற்குப் பிறகு அரச மன்னிப்பு வாயிலாக விடுதலை செய்யப்பட்டார்.
அந்த வகையில் நஜீப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள 12 ஆண்டு சிறைத் தண்டனையில் அவர் குறைந்த பட்சம் மூன்றில் ஒரு பகுதி என்ற அடிப்படையில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்து இருக்க வேண்டும். அதன் பின்னரே அவருக்கு மன்னிப்பு வழங்கப்படுவது குறித்து பரிசீலிக்கலாம் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஒன்பது மாதங்களாக சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் நஜீப்பிற்கு உடனடியாக அரச மன்னிப்பு வழங்குவதற்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் பரிந்துரை செய்யுமானால், அந்த அரசாங்கத்தை வெளியாட்கள் வீழ்த்துவதற்கு முன்னதாக அவரின் கூட்டணியைச் சேர்ந்தவர்களே வீழ்த்தக்கூடும் என்று முன்னாள் இஸ்கண்டார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங் எச்சரித்துள்ளார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


