எஸ்.பி.எம் தேர்வில் 11A பெற்ற சிறந்த மாணவர் ஒருவருக்கு மெட்ரிகுலேஷன் வகுப்பில் இடம் கிடைக்காமல், பாலிடெக்னிக் வாய்ப்பு மட்டுமே வழங்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகக் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை டிக்டாக்கில் வெளியிட்ட காணொளி மூலம் இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 10A மற்றும் அதற்கு மேல் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் இனம், பின்னணி பாராமல் மெட்ரிகுலேஷனில் இடம் உறுதி செய்யப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அமைச்சரவை அறிவித்திருந்த நிலைக்கு இது முற்றிலும் முரணாக உள்ளது என்று பிரகாஷ் சாடினார்.
சிறந்த மாணவர்களின் உழைப்பு அலட்சியப்படுத்தப்படுவது கல்வி முறையின் மீதான நம்பிக்கையைக் கெடுக்கும் என்று கூறிய பிரகாஷ் ர், இந்த விவகாரத்தில் உயர்கல்வி அமைச்சு உடனடியாகத் தலையிட்டு, மாணவருக்கு உரிய இடத்தை வழங்க வேண்டும் என்றும், சேர்க்கை முறையில் உள்ள குளறுபடிகளுக்கு வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.








