ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் தலைவர் ஆர். சீத்தாராமன் தலைமையில், 120 ஆண்டுகள் பழமையான சுங்கை பாரி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா இன்று மிகச் சிறப்புடன் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட பேரா மாநில இந்திய விவகாரங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன், இவ்வாலயத்திற்கு மேலும் 30 ஆயிரம் ரிங்கிட் உபரி நிதி வழங்குவதாக அறிவித்தார். ஏற்கனவே மாநில அரசாங்கம், 1 லட்சம் ரிங்கிட் வழங்கியதையும், இச்சபா பராமரிக்கும் மின் சுடலையை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு 1.2 மில்லியன் ரிங்கிட் வழங்கியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
மேலும், வரும் ஜூலை 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான முருகன் மாநாடு கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய மண்டபத்தில் இலவசமாக நடைபெறவிருக்கிறது என்று டத்தோ சிவநேசன் குறிப்பிட்டார்.
தேசிய முருகன் மாநாட்டுக்கான செலவுகளை பேரா மாநில அரசாங்கமே முழுமையாக ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் விவரித்தார்.
சுமார் 10 லட்சம் ரிங்கிட் செலவில் சீரமைக்கப்பட்ட சுங்கை பாரி, ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய திருப்பணிக்கு பொதுமக்கள் நல்ல ஆதரவை வழங்கியதாகச் சபா செயலாளர் வெ. மு. தியாகராஜன் கூறினார். தமிழக மற்றும் மலேசிய குருமார்கள் இணைந்து நடத்திய இக்கும்பாபிஷேக விழாவில் துணை அமைச்சர் எம். குலசேகரன், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.














