கோலாலம்பூர், ஆகஸ்ட்.24-
கோலாலம்பூர், மலேசியாவின் மெர்டேக்கா சதுக்கத்தில், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக காஸாவுடன் மலேசியா எனும் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர். இந்த நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளை நிற ஆடை அணிந்து, பாலஸ்தீனக் கொடியை ஏந்தி, அமைதியான முறையில் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
பல மாநிலங்களிலிருந்தும் பல்லின மக்கள் வெள்ளம் போல் வந்து குவிந்தனர். பிரதமர் அன்வார் இப்ராஹிம் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, பாலஸ்தீனத்தின் விடுதலைக்கான மலேசியாவின் உறுதியான நிலைப்பாடு குறித்து உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், மெர்டேக்கா சதுக்கத்தில் 8,000க்கும் மேற்பட்ட தெடி பேர் Teddy Bear எனப்படும் கரடி பொம்மைகளைக் கொண்டு பாலஸ்தீன வரைபடம் உருவாக்கப்பட்டு மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. காஸாவில் தியாகம் செய்யப்பட்ட 18,000க்கும் மேற்பட்ட குழந்தைகளின் நினைவாக இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட Teddy Bear பொம்மைகள் மலேசியாவில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும். இது பாலஸ்தீனியர்களுக்கான மலேசியாவின் ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.








