கடந்த 2021-ஆம் ஆண்டு நிகழ்ந்த எல்.ஆர்.டி ரயில் விபத்து தொடர்பாக, ரேபிட் ரயில் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட 1 லட்சம் ரிங்கிட் அபராதத்தை தரைப் பொதுப் போக்குவரத்து ஏஜென்சியான அபாட் உறுதி செய்துள்ளது.
கடந்த2021 ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதி கோலாலம்பூர் கம்போங் பாரு மற்றும் கே.எல்.சி.சி நிலையங்களுக்கு இடையே இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 213 பயணிகள் காயமடைந்தனர்; அவர்களில் 47 பேர் பலத்த காயமடைந்தனர். தண்டவாளப் பராமரிப்பில் ஏற்பட்ட பெரும் தோல்வியே இந்த விபத்திற்குக் காரணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரயில் தண்டவாளங்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியது மற்றும் தொழில்நுட்பக் குறைபாடுகளைக் கண்டறியத் தவறியதற்காக, 2010 ஆம் ஆண்டு தரைப் பொதுப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்துப் பாதுகாப்பில் எந்தச் சூழலிலும் சமரசம் செய்ய முடியாது என்றும், மற்ற ரயில் சேவை நிறுவனங்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமைய வேண்டும் என்றும் அபாட் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பயணிகள் பலர் ஏற்கனவே ரேபிட் ரயில் மற்றும் பிரசரானா நிறுவனங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.








