கோலாலம்பூர், ஜனவரி.21-
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்த போது, இரண்டு துணை அமைச்சர்கள் தங்களுக்கு இடையே சாட்டிங் செய்து கொண்டு, பேசிக் கொண்டிருந்ததற்காக துணைச் சபாநாயகர் டத்தோ ரம்லி முஹமட் நோர் கடுமையாகக் கண்டித்தார்.
கல்வித்துறை துணை அமைச்சர் வோங் கா வோ மற்றும் வீடமைப்பு, ஊராட்சித்துறை துணை அமைச்சர் டத்தோ ஐய்மான் அதிரா சாபு ஆகிய இருவருமே கண்டிக்கப்பட்டவர்கள் ஆவர்.
உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு முகமை குறித்த கேள்விக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது இந்த இரு துணை அமைச்சர்களும் அவையில் அமர்ந்து சாட்டிங் செய்து கொண்டு இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
"துணை அமைச்சர்களே, நீங்களும் அவைக்குள் ஒரு கூட்டத்தை நடத்துகிறீர்களா? அமைச்சரின் பதிலைக் கவனியுங்கள், அதைத் குறித்துக் கொள்ளுங்கள்" என்று ரம்லி முகமட் நோர் எச்சரித்தார்.
நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைப் பேணுமாறும், மற்றவர்கள் பேசும் போது அமைதியாகக் கவனிக்குமாறும் உறுப்பினர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.








