பி.கே.ஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோ ரஃபிஸி ரம்லி, கட்சியின் கொள்கை மற்றும் தலைமைத்துவத்துடன் உடன்படவில்லை என்றால் தாராளமாக வெளியேறலாம் என அக்கட்சியின் மாநில மற்றும் தொகுதித் தலைவர்கள் பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளனர்.
பிரதமரும் கட்சியின் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சிறுமைப்படுத்தும் வகையில் ரஃபிஸி அண்மைக்காலமாகத் தொடர்ந்து பொதுவெளியில் கருத்து தெரிவித்து வருவதற்கு மலாக்கா, சரவாக் மற்றும் கிளந்தான் மாநில பி.கே.ஆர் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கருத்து வேறுபாடுகள் கட்சிக் கூட்டங்களில் விவாதிக்கப்பட வேண்டுமே தவிர, பொதுவெளியில் விமர்சிப்பது எதிர்க்கட்சிகளுக்கு ஆயுதமாக அமைந்துவிடும் என அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ரஃபிஸியின் இத்தகைய செயல்பாடுகள் கட்சிக்கு ஒரு பெரும் சுமையாக மாறிவிட்டதாகவும், கட்சியை உள்நோக்கத்துடன் பலவீனப்படுத்த அவர் முயல்வதாகவும் மலாக்கா பி.கே.ஆர் துணைத் தலைவர் முகமட் குசைரி முகமட் கமால் சாடியுள்ளார்.








