ஜோகூர் பாரு, செப்டம்பர்.29-
ஜோகூர் பாரு, சுல்தான் இஸ்கண்டார் கட்டட குடிநுழைவு, சுங்கம், நோய்த் தடுப்புச் சோதனைச் சாவடியில் இரண்டு வாகனமோட்டிகள் கைகலப்பில் ஈடுபட்ட காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
அந்த சோதனைச் சாவடியில் பேருந்துகள் செல்வதற்கு பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட தடத்தில் எதிர்த்திசையில் டொயோட்டா வெல்ஃபியர் வாகனம் சென்றதால், இந்த கைகலப்புக்கு காரணம் என்று ஜோகூர் பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவுப் செலாமாட் தெரிவித்தார்.
இந்தச் சண்டையில் 28 வயது இ-ஹெய்லிங் ஓட்டுநரும், பேருந்து ஓட்டுநரும் சம்பந்தப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
டொயோட்டா வெல்ஃபியர் வாகனத்தைப் பயன்படுத்திய இ-ஹெய்லிங் ஓட்டுநர், தனக்கு பேருந்துக்காரர் வழிவிடத் தவறி விட்டார் என்று கூறி, சண்டைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சினமூட்டும் சொற்களை இருவரும் பயன்படுத்தியதைத் தொடர்ந்து இரண்டு பேருமே ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு சொற்பக் காயங்களுக்கு ஆளாகினர். பின்னர் இருவரும் இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளனர் என்று ஏசிபி ரவுப் செலாமாட் தெரிவித்தார்.








