கோலாலம்பூர், நவ. 29-
கிழக்குக்கரை மாநிலங்களின் தொடரும் அடை மழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் கிளந்தானில் வெள்ள நிலைமை மோசமடைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளந்தானில் நேற்று இரவு, 50 ஆயிரம் பேராக இருந்த நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்தவர்களின் எண்ணிக்கை, இன்று காலையில் 59 ஆயிரத்து 232 பேராக உயர்ந்துள்ளது.
பாசீர்மாஸ், தும்பாட், கோத்தாபாரு, கோலகிராய், தானா மேரா மற்றும் பாச்சோக் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 221 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கிளந்தானில் பிரதான ஆறுகளான சுங்கை லானாஸ், சுங்கை கிளந்தான், சுங்கை கோலொக், சுங்கை சுக்கோர் ஆகிய நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு கரைபுரண்டோடுவதாக வடிக்கால், நீர்பாசனத்துறை அறிவித்துள்ளது.
கோல கிராய் ஆற்றில் நீர் மட்டம் உயர்ந்து ஆற்றின் இரு மருங்குகளிலும் பெர்ரி போக்குவரத்து சேவை நிலைக்குத்தியுள்ளது. இதனால் போக்குவரத்து தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் சுமார் 5 ஆயிரம் பேர் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
கிழக்கு கரை மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தினால் மலாயன் ரயில்வே பெர்ஹாட்டான கேடிஎம், 12 வழித்தடங்களுக்கான ரயில் சேவையை ரத்து செய்துள்ளது. ஜோகூர்பாரு செண்ரல் – தும்பாட் / கிம்மாஸ் – கோல லிப்பிஸ் / தும்பாட் – கோலலிப்பிஸ் ஆகியவை ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகளில் அடங்கும்.
திரெங்கானு மாநிலத்தில் வெள்ளத்தினால் 5 ஆயிரத்து 916 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 911 பேர், தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 232 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தவிர திரெங்கானுவில் இன்று காலை 10 மணி வரையில் 32 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக பொதுப்பணி இலாகா அறிவித்துள்ளது.








