கடந்த வாரம் வியாழக்கிழமை கோலாலம்பூர், ஜாலாங் சிலாங்- கில் சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிராக போலீசார் மேற்கொண்ட மிகப்பெரிய சோதனை நடவடிக்கையின் போது, ஒரு வர்த்தகத் தளத்தில் சோதனை என்ற பெயரில் அந்த கடையில் உள்ள 85 ஆயிரம் வெள்ளி ரொக்கத்தை திருடியதாக கூறப்படும் மூன்று போலீஸ்காரர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய பொது நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்த 26,30,35 வயதுடைய அந்த மூன்று போலீஸ்கார்களுக்கு எதிரான விசாரணை அறிக்கை, துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக, அந்த மூவரும் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக போலீஸ் படைத் துணைத்தலைவர் டத்தோ ஶ்ரீ அயோப் கான் மைடின் பிட்சைதெரிவித்தார்.
குற்றம் இழைக்கும் எந்தவொரு போலீஸ்காரரையும் அரச மலேசிய போலீஸ் படைத் தற்காக்காது என்றும், அவர்களுக்கு எதிராக புகார் கிடைக்குமானால் உரிய விசாரணை நடத்தப்படும் என்று துணை ஜஜிபி தெளிவுபடுத்தினார்.
கோலாலம்பூர், ஜாலான் புடுவிற்கு அருகில் போலீசார் மேற்கொண்ட மிகப்பெரிய சோதனை நடவடிக்கையின் போது மூன்று போலீஸ்காரர்கள் தங்கள் கடையில் சோதனை என்ற பெயரில் 85 ஆயிரம் வெள்ளியை களவாடியது, சிசிடிவி கேமராவின் மூலம் தெரியவந்துள்ளது என்று அதன் உரிமையாளர் போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து அந்த மூன்று போலீஸ்கார்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் களவாடியதாக நம்பப்படும் பணத்தில் 63 ஆயிரத்து 500 வெள்ளி மீட்கப்பட்டுள்ளது. தனது பெரோடுவா மைவி காருக்கு புதிய டயர்கள் மாற்றப்பட்டதற்கான ரசீதையும் போலீஸ்காரர் ஒருவரிடமிருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.








