கோலாலம்பூர், நவம்பர்.06-
பாதிரியார் ரேய்மண்ட் கோ காணாமல் போன வழக்கில், நேற்று உயர்நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பைக் கேட்ட அவரின் மனைவி Susanne Liew, எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும் தனது கணவருக்கு ஈடாகாது என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ள அவர், தனது கணவர் காணாமல் போன சம்பவத்தில், சட்டத்தை மீறியவர்கள் அதற்கான தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இத்தீர்ப்பு தனக்கு கலவையான உணர்வுகளைத் தருவதாகவும், எவ்வளவு பணம் கொடுத்தாலும், தனது கணவரைத் திரும்பக் கொண்டு வர முடியாது என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களைக் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றியதாகக் கூறி தனது கணவருக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் வந்ததை Liew நினைவு கூர்ந்தார்.
துப்பாக்கித் தோட்டாக்கள் அடங்கிய பிளாஸ்டிக் பைகளை அஞ்சலில் அனுப்பி தங்களுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.








