கங்கார், நவ.9-
சுற்றுச்சூழலுக்கு நட்புறவாகவும், மாசுப்பாட்டை குறைக்கவும் மலேசிய அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஒன்றாக நெகிழிப்பைகள் எனப்படும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை குறைப்பதும் ஒன்றாகும்.
ஒரு முறைக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகள் விநியோகிக்கும் நடவடிக்கையை குறைக்குமாறு மாநில அரசாங்கங்களுக்கு இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு தொடர் கோரிக்கை விடுத்து வருகிறது.
இக்கோரிக்கையை செவிமடுத்து வரும் மாநிலங்களில் பெர்லிஸ் மாநிலம், பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டிற்கு முழு தடை விதிக்கப்படுவதற்கு முன்னதாக ஒரு பிளாஸ்டிக் பைக்கு 50 காசு முதல் 2 வெள்ளி வரை விற்பனை செய்யும் நடவடிக்கையை கட்டம் கட்டமாக அமல்படுத்தவிருப்பதாக அறிவித்துள்ளது.
ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும் வர்த்தகத் தளங்களில் வாடிக்கையாளர்களுக்கு இந்தக்கட்டணம் விதிக்கப்படும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அஸ்ருல் அப்துல் ஜாலில் தெரிவித்துள்ளார்.
இந்த விலை 2025 ஆம் ஆண்டில் ஒரு வெள்ளியாகவும், 2026 ஆம் ஆண்டில் 2 வெள்ளியாகவும் உயரும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் மக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








