ஷா ஆலாம், அக்டோபர்.07-
கடந்த அக்டோபர் 1 ஆம் தேதிக்கும் 5 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாளில் சுபாங் ஜெயா மற்றும் செர்டாங் வட்டாரத்தில் போலீசார் மேற்கொண்ட மிகப் பெரிய சோதனை நடவடிக்கையில் 25.15 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள 223.5 கிலோ எடை கொண்ட போதைப் பொருளை சிலாங்கூர் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
மிகப் பெரிய அளவிலான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது மூலம் இரண்டு போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி காஹார் தெரிவித்தார்.
இந்த இரண்டு கும்பல்கள் முறியடிக்கப்பட்டது மூலம் 30 க்கும் 56க்கும் இடைப்பட்ட வயதுடைய 6 உள்ளூர் ஆடவர்களும், ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று ஷா ஆலாமில் சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ஷாஸெலி குறிப்பிட்டார்.
வீடு ஒன்று முன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வோக்ஸ்வேகன் காரில் இருந்த மூன்று நபர்களைச் சிலாங்கூர் போலீசார் கைது செய்தது மூலம் அடுத்த நான்கு நபர்கள் பிடிபட்டதுடன் மிகப் பெரிய அளவில் போதைப் பொருளைக் கைப்பற்ற முடிந்ததாக அவர் விளக்கினார்.








