கோலாலம்பூர், நவம்பர்.06-
பயணிகள் ரயில்களைக் குத்தகைக்கு எடுப்பது உள்ளிட்ட பல்வேறு இரயில் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ள, ஒரு சிறப்பு நோக்கம் கொண்ட நிறுவனத்தை அமைப்பது குறித்து மலேசியாவும், சீனாவும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இரயில்வே துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இரு நாடுகளுக்குமிடையில் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
G2G என்ற அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்களின் அடிப்படையில், இந்த இரயில் மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த, மலேசிய அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், மொத்த பங்குகளில் 51 விழுக்காடு பங்குகள் மலேசிய அரசின் சொந்த நிறுவனத்தின் கீழ் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்படும் என்றும் நாடாளுமன்றத்தில் நேற்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.








