மலாக்கா முதலமைச்சர் இலாகாவின் முன்னாள் மூத்த பெண் அதிகாரி ஒருவர், 60 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் அதிகமான நிதி சம்பந்தப்பட்ட நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகளின் கீழ் இன்று மலாக்கா, ஆயர் குரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
மலாக்கா முதலமைச்சரின் முன்னாள் கார்ப்பரேட் தொடர்புப் பிரிவின் முதன்மை உதவிச் செயலாளரான 43 வயது டி. புனிதா தேவி என்ற அந்தப் பெண்மணி, நீதிபதி எலிசபெத் பாயா வான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.
2024 ஆம் ஆண்டு மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உட்பட மலாக்கா மாநில அளவிலான மடானி ஹரி ராயா கொண்டாட்டத்திற்காக ஊழியர்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதி என மொத்தம் 56 ஆயிரம் ரிங்கிட் நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக புனிதா தேவிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டு சிறைத் தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 403 பிரிவின் கீழ் புனிதாதேவி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
மேலும் நடத்தப்படாத கார்ப்பரேட் தொடர்புப் பிரிவின் குடும்ப தினம் மற்றும் வேலை இலக்கு திட்டத்திற்காக நிதி வசூலிப்பதாகக் கூறி இரு மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உட்பட மூன்று நபர்களை ஏமாற்றிப் பணம் பெற்றதாக புனிதாதேவி குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் மலேசிய ஊழல் தடுப்பு ஆணை சட்டத்தின் கீழ் புனிதாதேவிக்கு 10 ஆண்டு சிறை, அபராதம் மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்கப்படலாம்.
எனினும் தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் புனிதாதேவி மறுத்து விசாரணை கோரினார். இதனை தொடர்ந்து ஒரு நபர் உத்தரவாதத்துடன் 30 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் புனிதாதேவி விடுவிக்கப்பட்டுள்ளார்.








