பாலிங், ஜனவரி.31-
கெடா, பாலிங், குப்பாங்கில் பல்பொருள் அங்காடிக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரிலிருந்து, 10,000 ரிங்கிட் ரொக்கம் அடங்கிய கைப்பை திருடப்பட்டதில் பெண் ஒருவர் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து பாலிங் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிடெண்டண்ட் Brandon Anak Richard Joe வெளியிட்டுள்ள தகவலின்படி கடந்த வியாழக்கிழமை காலை சுமார் 8.40 மணியளவில், பாதிக்கப்பட்ட பெண் தனது பெருடுவா அவான்சா (Perodua Avanza) காரை பல்பொருள் அங்காடிக்கு முன்னால் நிறுத்திவிட்டு மளிகைப் பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார்.
பொருட்கள் வாங்கி விட்டு வீடு திரும்பிய பின்னரே, காரில் இருந்த தனது கைப்பை காணாமல் போனதை அவர் உணர்ந்துள்ளார். சம்பவ இடத்திலிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க உள்ளூர் நபர் ஒருவர், காரின் முன் கதவைத் திறந்து பையைத் திருடிச் செல்வது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
அந்தப் பையிலிருந்த 10,000 ரிங்கிட் ரொக்கம், பாதிக்கப்பட்ட பெண், வங்கியில் டெபாசிட் செய்வதற்காக வைத்திருந்த வியாபாரப் பணம் என்பது என்று விசாணையில் தெரிய வந்துள்ளதாக Brandon தெரிவித்தார்.








