கோலாலம்பூர், ஜனவரி.31-
தைப்பூசத் திருநாளைக் கொண்டாடும் அனைத்து இந்துப் பெருமக்களுக்கும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
"தைப்பூசம் என்பது தியாகம், சுயபரிசோதனை, ஆன்மீக பலம் மற்றும் பொறுமையின் மதிப்பை உணர்த்தும் ஓர் அடையாளமாகும். எனவே, இந்தத் தைப்பூசக் கொண்டாட்டங்களின் போது வெளிப்படும் ஒழுக்கமும், விடாமுயற்சியும் ஒட்டுமொத்த சமூகத்தின் மரியாதைக்கும் பாராட்டுக்கும் உரியது என்றார் பிரதமர்.
"இந்த நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு மத மற்றும் கலாச்சாரக் கொண்டாட்டங்களிலும் காணப்படும் நேர்த்தியும் நல்லிணக்கமும், மலேசியர்களின் பன்முகத்தன்மைக்குள் இருக்கும் ஒற்றுமையைப் பிரதிபலிக்கிறது. வேற்றுமை என்பது நமக்கு அந்நியமான ஒன்றல்ல, அது நீண்ட காலமாகவே மலேசியாவின் அடையாளத்தை வடிவமைத்து வரும் ஒரு நிதர்சனமான உண்மையாகும்.
இந்தத் தைப்பூசத் திருநாள் அனைத்து இந்து பக்தர்களுக்கும் மன அமைதியை வழங்கட்டும் என விருப்பம் தெரிவித்த பிரதமர், நமது பல்லினச் சமூகம் பரஸ்பர மரியாதை மற்றும் நல்லிணக்கத்தைத் தொடர்ந்து பேண வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மேலும், இத்திருநாளை நன்றியுணர்வோடும், கண்ணியத்தோடும், சமூக வாழ்வின் அடிப்படையான நற்பண்புகளைப் போற்றும் வகையிலும் கொண்டாட வேண்டும் என்றும் பிரதமர் தனது தைப்பூச வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.








